Archive
பிடித்த முத்தம்
உனக்கு பிடித்த முத்தம் எது என்று கேட்டாள்
கைகளில் உன் முகம் ஏந்தி இதழ் சேர்க்க
ஒரு நொடி முன் மூடிய உன் கண்களில்
படரும் காதலும் வெட்கமும் இரசித்த ‘முதல் முத்தம்’ என்றேன்
உனக்கு ? என்றேன் தன்னிச்சையாய்
நான்கடி தள்ளிசென்று
நீ கொடுக்கபோகும் ‘அடுத்த முத்தம்’ என்று கண்சிமிட்டி பறந்தாள்
உறுத்தல்
உனக்கான காத்திருத்தலில் நிமிடங்களை விடவும் வேகமாக கரைகிறேன்
நீ அர்த்தங்கள் தருவாய் என்பதற்காக மீதமிருக்கும் என்னை சேமித்து வைக்கிறேன்
உன்னைப்பற்றிய கற்பனைகள் முழுமைபெறாத கவிதைகளாய் உறுத்துகின்றன விழிகளில்
மழைத்துளி
சிந்தும் மழைத்துளியில் நினைவுகள் கரைய
காற்றின் சுவாசத்தில் திரவநிலை கற்பனைகள்
தீர்ந்துபோய் இருக்கலாம் என்று தோன்றுகிறது
சிதைவு
எண்ணங்களை சுமக்க முடியாத வார்த்தைகள்
சிலசமயம் சிதைந்துவிடுகிறது மௌனமாய்
முத்தக் கணக்கு
நேற்று கொடுத்த முத்தங்களை விளையாட்டாய் திருப்பிக் கேட்டேன்
கூடுதல் முத்தங்கள் தந்தாய்
கேட்டதற்கு
நாளை வாங்கிக்கொள்வதாய் கண் சிமிட்டுகிறாய்
மீன்கள்
என் வீட்டு கிணற்றுக்குள் வளரும் விண்மீன்கள்
தின்றுவிட்டு மீதமிருந்த அரைவட்ட நிலவை
வானுக்கு தந்துவிடுகின்றன ஒவ்வொரு இரவும்
என் காலம்
உடைந்து விழுந்த நேற்றை
சரிசெய்ய முயன்றேன்
விரிசல் விட்டது இன்று
கணமான நாளையை
காப்பாற்ற நினைத்தேன்
நொருங்கி விட்டது இன்று
கற்பனைகள் விரும்பும்
ஒரு அழகான இன்று
நோக்கி என் காலம்
நகர்வதாய் நினைத்துக் கொள்கிறேன் என்றும்
முத்தம்
கண்கள் பேச தொடங்கியபின்
ஊமையாகும் உதடுகளுக்கான
ஒரே மருந்து – முத்தம்



